உள்ளூர் செய்திகள் (District)

ஆந்திரா-ஒடிசா இடையே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் 29-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2024-09-24 04:41 GMT   |   Update On 2024-09-24 04:41 GMT
  • வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
  • இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை:

ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News