காரமடை நகராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்
- ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது.
- கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை வகித்தார். ஆணையாளர் அமுதா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
வனிதா சஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க): கடந்த 6 மாதமாக நகர்மன்ற கூட்ட த்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. குறிப்பாக தெருவிளக்கு, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையாளர்: 10 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்னேஸ் (பா.ஜக): நகராட்சி கூட்டம் 11 மணிக்கு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது. கூட்டத்தில் வைக்கப்பட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்ற தாமதமாகும். எனவே இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகளை மட்டுமே கேட்க வேண்டும். தனியாக ஒருநாள் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஆணையாளர்: நேரம் இல்லாத காரணத்தினால் இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகள் மட்டுமே விவாதிக்கப்படும். தீர்மானங்கள் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் மற்றொரு நாள் நடத்தப்படும்.
ராம்குமார் (திமுக): சத்ய சாய் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இப்பகுதியில் உள்ள 18 தெருவிளக்குகளும் எரிவது இல்லை. செல்வபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கல்வெட்டுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்தில் உள்ளனர்.
குருபிரசாத் (திமுக): தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நகராட்சியில் கடந்த மாதங்களில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 350க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எந்த வளர்ச்சி பணிகளும் நடக்க வில்லை. நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2.70 கோடி மதிப்பில் 27 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு, உள்ளிட்டவை செய்து தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது. எனவே இதனை சிறப்பு பணி த்திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்நிலையில் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற நடந்த வாக்கு வாதத்தின் போது 23-வது வார்டு உறுப்பினர் செண்பகம் (திமுக) மற்ற உறுப்பினர்களை பார்த்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.
இதனால் ஆவேசமடைந்த உறுப்பினர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்ற கூட்ட த்தில் சலசலப்பு ஏற்பட்டது.