திருப்பூரில் வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை- டிரைவர் வெறிச்செயல்
- சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
பீகாரை சேர்ந்தவர் பவன் யாதவ் (வயது 27). இவர் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகர் பி.எம்.காம்ப்ளக்ஸ் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரதாரி (50) என்பவர் அவரது மனைவி சித்ராதேவி(43)யுடன் திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள மற்றொரு பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். ஒரே பகுதியில் இருவரும் வசித்து வந்ததால் பவன்யாதவுக்கும், உபேந்திரதாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பவன்யாதவ், உபேந்திரதாரி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உபேந்திரதாரி மனைவி சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இதையறிந்த உபேந்திரதாரி அதிர்ச்சியடைந்ததுடன், பவன்யாதவ்வை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சித்ராதேவியுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு பவன்யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்திரதாரி, எனது மனைவியுடனான தொடர்பை விட்டு விடு என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, தான் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவ்வை சரமாரி வெட்டினார். இதில் அவரது தலை, முழங்கை, வலது மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பவன்யாதவ் சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்து உபேந்திரதாரி தப்பி சென்றுவிட்டார்.
பவன்யாதவ்வின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், பவன்யாதவ்வை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவன்யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பவன் யாதவ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் பிரச்சினையில் வடமாநில தொழிலாளியை டிரைவர் வெட்டிக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.