கடை பெயர் பலகைக்கு கட்டணம்- என்.ஆர்.தனபாலன் கண்டனம்
- தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் சொத்துவரி 2 மடங்காக உயர்த்திய காரணத்தால் கடை வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
- வணிக நிறுவனங்கள் கடைகளை மூடிவிட்டு வீதிகளில் இறங்கி போராடும் அசவுகரியமான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறிய மற்றும் பெரிய அளவில் கடைகள் நடத்தி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை வதைக்கும் பொருட்டு அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்துள்ள கடைகளின் பெயர் பலகைக்கும் வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் உழைத்து வாழக்கூடிய வியாபாரிகள் மீது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் சொத்துவரி 2 மடங்காக உயர்த்திய காரணத்தால் கடை வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது. வாடகையைத்தொடர்ந்து 2 முறை மின்கட்டணத்தை உயர்த்திய அரசு, தற்போது கடை பெயர் பலகைகளுக்கும் வரி விதிக்க நினைப்பது கேலிக்கூத்தாகும். ஆதலால், வணிக நிறுவனங்கள் கடைகளை மூடிவிட்டு வீதிகளில் இறங்கி போராடும் அசவுகரியமான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.
வியாபாரிகளின் நலன் கருதியும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதியும் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைக்கு வரிவிதிக்கும் எண்ணத்தை தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.