நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் பேரணி- டீன் ரேவதி தொடங்கி வைத்தார்
- நைட்டிங்கேல் பிறந்தநாளை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
- நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது.
நெல்லை:
மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் உலக செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவி லியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ந் தேதியை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் இன்றைய தினம் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவமனை சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி, துணை முதல்வர் சுரேஷ் துரை, செவிலிய கண்காணிப்பாளர்கள் பானு, வள்ளி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி செவிலியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.