கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
- வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
- பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழக்கடை, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் இன்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் என்று கூறி அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக கூறினர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனைநடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர்.