பல ஆண்டுகளாக போராடிய பள்ளி மாணவிக்கு வாரிசு சான்று, பட்டா வழங்கிய அதிகாரிகள்
- வாரிசு மற்றும் பட்டா கேட்டு கொடுத்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது
- பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு மாணவி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 17). இவர் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
நான் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். எனது தாயார் சந்திரா மனநலம் பாதித்தவர். நாங்கள் வசிக்கும் வீடு சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பாம்பு, எலி போன்ற பூச்சிகள் வீட்டுக்கு வருவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.
எனவே எனது தந்தை ஆறுமுகத்தின் வாரிசு என்பதற்கான சான்றும், நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டாவும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்டதின் பேரில் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவியின் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததும், அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் உறுதியானது. ஆனால் மாணவியின் தந்தைக்கு 2 மனைவிகள் என்பதும் முதல் மனைவி இறந்து விட்டதால் கரூரில் இருக்கும் அவரது மகள் கவிதாவிடம் எழுத்துப்பூர்வமான சம்மதம் பெற்று பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து சந்திரா குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மாணவிக்கு வாரிசு சான்றிதழ் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.