தீபாவளி விடுமுறையையொட்டி ஆழியார் அணை, கவியருவிக்கு 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் வருகை
- நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
- சுற்றுலா பயணிகள் அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, கவியருவி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாபயணிகள் வருகை அதிகளவு உள்ளது.
இதில் ஆழியாருக்கு உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூ ர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதிலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 11-ந்தேதியில் இருந்து விடுமுறை என்பதால் ஆழியாரில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.
நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்கு வந்த பயணிகளின் வாகனங்கள் பூங்கா அருகே உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் அடிக்கடி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் 3 நாட்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல் ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு கடந்த 3 வாரமாக வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள், அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.
வெகு நாட்களுக்கு பிறகு கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், தடை விதிக்கப்பட்ட நவமலை வனப்பகுதிக்கு விதிமீறி பயணிகள் செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.