ஒருதலைகாதல்-கோவையில் இளம்பெண் திருமணத்தை நிறுத்த முயன்ற வடமாநில வாலிபர்
- மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
- மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
கோவை,
மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர் 65 வயது தொழிலாளி. இவர் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைப்புதூரில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
மேலும் ராஜேஷ் போஜா செட்டி அடிக்கடி அந்த தொழிலாளியை தொடர்பு கொண்டு அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி வந்தார்.ஆனால் தொழிலாளி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.
இது ராஜேஷ் போஜா செட்டிக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் நேற்று காலை திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு இருந்த தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி தகராறு செய்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் போஜா செட்டி தொழிலாளி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை அடித்து உதைத்துள்ளார்.
இதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர்களையும் ராஜேஷ் போஜா செட்டி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் திருமண மண்டபத்திற்குள் புகுந்து திருமணத்தை நிறுத்த முயன்ற ராஜேஷ் போஜா செட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.