சேலத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
- சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், சிறிய அளவு சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.
- சில்லரை கடைகளில் இதை விட அதிகமாக விற்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தை, தினசரி சந்தைகளுக்கு தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் லோடு அதிக அளவில் வருகிறது.
அறுவடை
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் மற்றும் மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயம் உள்ளூர்களில் கூடும் சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்தும் வியாபாரிகள் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெங்காயம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
ரூ.100 -ஐ எட்டியது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னவெங்காயத்தின் சில்லரை விலை ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ரூ.50 அதிகரித்துள்ளது.
சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், சிறிய அளவு சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் இதை விட அதிகமாக விற்கப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகிழக்கு பருவமழையின்போது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சின்ன வெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த விலை உயர்வின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.