மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
- சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).
இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.