பரந்தூர் விமான நிலைய விவகாரம்: 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு
- மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
சென்னை:
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அரசு அறி விப்பு வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இதனால், குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி, பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.
அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப் படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப் படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கணக்கிட்டு நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 எக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 2, பிளாட் எண்-59 மற்றும் 75, ரோஜாம்பாள் சுப்பிரமணிய முதலியார் தெரு, காரை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தங்கள் ஆட்சேபத்தை எழுத்து மூலமாக அளிக்கலாம்.
ஆட்சேபனை மனுக்கள் மீது ஜூலை 22 மற்றும் 23 30-ந் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே இது போன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொடவூர் கிராமம், அக்கமாபுரம், சிறுவள்ளூர் பகுதியில் உள்ள நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.