உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Published On 2024-06-07 06:46 GMT   |   Update On 2024-06-07 06:46 GMT
  • கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும்.

பல்லடம்:

திருப்பூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம், கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அறிவொளி நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி முன்புள்ள சாலையில் இன்று காலை 9 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15- வது நிதிக்குழு மானிய திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை நம்பி ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

எனவே திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாக அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News