விபத்தில் தொழிலாளி பலி: பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.
- மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல்-பழைய கரூர் சாலை தொட்டண ம்பட்டி பிரிவு பகுதியில் பழனிச்சாமி(60) கூலித்தொழிலாளி நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பால் வாகனம் பழனிச்சாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.