தாம்பரத்தில் பள்ளம் மேடான சாலைகளை சரி செய்யாததால் பொதுமக்கள் அவதி- தா.மோ.அன்பரசன் 20ந்தேதி ஆய்வு
- அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை:
நகராட்சியாக இருந்த தாம்பரம் 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 70 வார்டுகளை உள்ளடக்கிய இந்த மாநகராட்சியில் 55க்கும் மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் வெற்றி பெற்று உள்ளனர். மேயராக வசந்த குமாரி, துணை மேயராக காமராஜ் உள்ளனர். இருவரும் தி.மு.க. தான்.
இந்நிலையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்று ஓராண்டு கடந்தும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இன்னும் அடிப்படை பிரச்சினையான சாலை வசதி கூட சரி செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒவ்வொரு சாலையும் பள்ளம்-மேடாக காட்சி அளிக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு சாலையும் நடுநடுவே பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளதுடன் சாலை ஓரம் மணல் மற்றும் கட்டிட இடிபாடுகளும் காணப்படுகிறது.
எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போல கழிவு நீர் பிரச்சினை, குப்பை பிரச்சினையும் தீர்க்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக புகார்கள் தொகுதி அமைச்சரான தா.மோ. அன்பரசன் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் வருகிற 20-ந் தேதி தாம்பரம் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர்களின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். குரோம்பேட்டையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.க்களான இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு புகார் தெரிவிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.