மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்.
- முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ேமாகன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆகாஷ் (வயது 7) நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியாக முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியின்கீழ் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தங்கராஜ் என்பவரிடம் மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துைண கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.