தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மக்கள் மனு
- ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம்.
- தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மூடப்பட்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட கலெக்டரிடம் பலர் தனித்தனியாக மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை மாசுவின் காரணமாக தூத்துக்குடியில் பாதிப்பு ஏற்பட்டது என்று தவறான தகவல்களை பரப்பியதால் நாங்கள் போராட்டத்திற்கு சென்றோம். இந்த ஆலையால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் கடலில் மீன்வளம் குறைவாக உள்ளது என்று எங்களுக்கு தவறாக வதந்தி பரப்பப்பட்டது.
ஆனால் கடந்த 4 வருடம் ஆலை மூடப்பட்டுள்ள நிலையிலும் கடலில் அதே அளவு தான் மீன்வளம் கிடைக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். அது மட்டுமின்றி தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.