உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் வேண்டும் -கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2022-07-18 08:10 GMT   |   Update On 2022-07-18 08:10 GMT
  • உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • கே.பாலகிருஷ்ணன் பேட்டி

பெரம்பலூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படித்த மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வர் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சம்பவிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஆனாலும் அரசின் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் தொடர்பில்லாத பலரை போலீசார் கைது செய்து வழக்கு போட்டு வருகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த நடவடிக்கையை போலீஸ் கைவிட வேண்டும். அந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் தொகை வழங்க வேண்டும். போட்டி தேர்வு மற்றும் தேர்வு பயத்தால் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர், மாணவிகள் தற்கொலை முடிவை எக்காரணம் கொண்டும் தேடக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும். மாணவர்களின் உயிரோடு இனியும் விளையாடாமல் தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை முழுவதுமாக கைவிட வேண்டும்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி போடும் அவலநிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் வரி போட்டுக்கொண்டே போனால் இலங்கையில் நிகழும் நிலை இந்தியாவிலும் ஏற்படும். காவிரி - குண்டாறு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். காவிரியில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி நீரை கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்

பெரம்பலூர் மாவடத்தில் 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதே போல் 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இத்திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News