உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-04-30 06:13 GMT   |   Update On 2023-04-30 06:13 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்திட 700 எக்டருக்கு ரூ.5 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பெரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ -2, ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News