பெரம்பலூரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை
- பெரம்பலூரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்
பெரம்பலூர்:
விவசாயியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் கந்தன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் கலியமூர்த்தி (வயது39) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தகராறில் கலியமூர்த்தி (39), அவரது தம்பிகள் கருணாநிதி (35), சரத்குமார் (32) ஆகியோர் கந்தனை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகள் கலியமூர்த்தி உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கருணாநிதி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.