உள்ளூர் செய்திகள்

சென்னை அண்ணாநகரில் வீடுகளுக்கு முதல்முறையாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம்

Published On 2023-07-03 06:41 GMT   |   Update On 2023-07-03 08:15 GMT
  • இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
  • கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சென்னை:

பொதுத்துறை எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்.என்.ஜி. எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ எரிவாயு வருகிறது. இந்த எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இயற்கை எரிவாயுவை வீடுகளுக்கு வினியோகம் செய்ய பதிவுகள் நடந்து வருகிறது. இதற்கு டெபாசிட் கட்டணமாக ரூ.6,000, முன்பணமாக ரூ.500, இணைப்பு கட்டணமாக ரூ.590 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.6,500 திரும்ப பெறும் கட்டணம் ஆகும்.

இந்நிலையில் முதல்முறையாக சென்னை அண்ணாநகர் அருகில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 50 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயற்கை எரிவாயு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை எரிவாயு எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. முதல் பில் இந்த மாத இறுதியில் வரும் என்று இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News