- தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
- ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.
தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.
அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,