பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்: நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்பு
- சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.
பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்
நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.