உள்ளூர் செய்திகள்

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-02-22 09:22 GMT   |   Update On 2023-02-22 09:22 GMT
  • கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (24-ந் தேதி) வருடாந்திர தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தொடர்ந்து அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 25-ந் தேதி காலை 6 மணி முதல் விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முன்னதாக கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

26-ந் தேதி கங்கை பூைஜயும், 27-ந் தேதி இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.

இவ்விழாவையொட்டி நீலகிரி மட்டும் இன்றி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கூடலூர் வழியாக இயக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையம், வருவாய், காவல் உள்பட அனைத்து துறையினரும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News