உள்ளூர் செய்திகள்

திருமலைகிரி கோவிலில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-02-04 09:43 GMT   |   Update On 2023-02-04 09:43 GMT
  • திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
  • ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அந்த இளைஞரை, கோவிலினுள் நுழைந்ததற்காக பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க. பிரமுகர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.

மேலும் இளைஞரை திட்டிய மாணிக்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்த நிலையில் இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அனைத்து சமுதாய மக்களும், கோவிலில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு நேற்று அந்த பகுதியை சேர்ந்த பட்டியல் இன மக்கள் அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டு, கோவிலுக்குள் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கட்சியினர் சம்பந்தப்பட்ட மாரியம்மன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் கோவிலுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News