நெல்லை மாவட்டத்தில் பருவமழை கை கொடுக்காததால் வறண்டு போன குளங்கள்
- மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.
நெல்லை:
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மேல் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
விவசாயம் பாதிப்பு
இந்த நதியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 86 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அணை களில் தேங்கி வைக்கப்பட்டு, விவ சாயத்துக்கு பயன்படு த்தப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணையில் இருந்து ஒவ்வெரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயத்து க்காக தண்ணீர் திறந்து விடப்படும். தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையடுத்து குறிப்பிட்ட சில கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
குளங்கள் வறண்டன
அதேபோல் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நெல்லை மாவட்டத்தில் கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளி ட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ளங்களுக்கு செல்லும். அணையில் நீர் குறைவால் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டது. அவை வெடிப்பு விழுந்து காணப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் நயினார் குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுத்தமல்லி அணைக்கு வந்து அங்கு இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. மிகவும் பழமையான இந்த குளம் 15 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 12 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த குளம் தண்ணீர் தேங்கி, கடல் போல் கட்சி யளிக்கும். பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்.
இந்த குளம் மூலம் 370 ஏக்கர் பாச னம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கைகொடுக்காததால் குளம் நிரம்பவில்லை. நயினார் குளம் பாசனமும் பொய்த்து விட்டது. தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. ஒரு ஓரத்தில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன. மற்ற இடங்கள் வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.
இதேபோல் மானூர் பெரியகுளம் வடக்கு விஜயநாராயணம் குளம் ஆகிய பெரிய குளங்களும் வறண்டு காணப்படுகிறது. மானுர் பெரியகுளம் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அப்படிப்பட்ட குளங்கள் இந்த ஆண்டு குறைவான நீர்வரத்தை மட்டுமே கண்டு வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.