கரூர் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
- பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்:
அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், படித்த புத்தகங்கள், கணக்கு வழக்கு எழுதிய டைரிகள், வாகனங்கள், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்கின்றனர். அந்த பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக, 64 என்ற நெல் ரகங்களை வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து, பொரி தயாரிப்பதை 'ஓருப்பு பொரி' என்கின்றனர்.
அதேபோல் சிகப்பு அரிசியை வாங்கி, அதில் பொரி தயாரிப்பதை 'சிகப்பரிசி பொரி' என்கின்றனர். தவுட்டுப்பாளையம் அருகே சுல்தான்பேட்டையில், விறகுகளில் நெருப்பு மூட்டி செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால், மக்கள் அடுப்பு பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர்.
இதுகுறித்து பொரி தயாரிக்கும் ராமசாமி என்பவர் கூறியதாவது:-
நாங்கள் தயாரிக்கும் பொரி சுவையாக இருக்கும். இதை சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால், சுவை மிகுந்தது. கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.
நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால், பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு , கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர். கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.