திருப்பூரில் 4-வது நாளாக நீடிக்கும் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
- கடந்த 19-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, இந்த ஆண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.
ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர்.
இதுவரை வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு கடந்த 19-ந் தேதி முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளனர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
இந்தநிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நிலை குறித்து நேற்று அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி சங்கத்தின் செயலாளர் முருகேசன் கூறும்போது, '2 பெரிய நிறுவனங்கள் மட்டும் 7 சதவீத கூலி உயர்வை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த 2 நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்களை பெற்று செய்து கொடுக்கப்படும். அதேவேளையில் 7 சதவீதம் கூலி உயர்வு கொடுக்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பது, டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கிறோம் என்றார். இதன் காரணமாக தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.