குன்னூரில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
- ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
ஊட்டி:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அவர் குன்னூரில் இருந்து ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில், நீலகிரியில் உள்ள 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களின் பாரம்பரிய நடனமும் நடக்கிறது.
நீலகிரி பழங்குடியின மக்களின் தலைவர் ஆல்வாஸ் பழங்குடி மக்களின் சிறப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் பேசுகிறார். மேலும் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உணவு அருந்த உள்ளார்.
ஜனாதிபதி வருகையை யொட்டி குன்னூர், வெலிங்டன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டிருந்தது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.