தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக முற்றுகை போராட்டம்
- 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம்.
- 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.
சென்னை:
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 32 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி கைதானார்கள்.
இன்று 3-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். தூத்துக் குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு குழுவாக டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.
அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகம் வரை ஆசிரியர்களை வர விடாமல் ஆங்காங்கே மறித்து கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
இன்று நடந்த போராட்டத்திலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர். இதுபற்றி நிர்வாகிகள் கூறும்போது, 'ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது அரசுக்கு நல்லதல்ல.
தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.