உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கல்

Published On 2023-10-27 09:16 GMT   |   Update On 2023-10-27 09:16 GMT
  • புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரியை அறக்கட்டளை நிர்வாகமே செலுத்தும்.
  • விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டியும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விளத்தூர் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களை கவுரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளில் ஒருவரை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை 2-ம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தட்டிச்சென்றார்.

மேலும், வருகிற (2024-25) கல்வியாண்டில் விளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கட்டணங்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்திவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,

விளத்தூர் நடுநிலைப்பள்ளி முதல்வர் தையல் நாயகி தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள், விளத்தூர் ஊராட்சி தலைவர் ஜனனி, களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News