20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்து வருகிறார்கள். எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காரை க்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேற்று இரவு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.விழாவில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 150-க்கும் மேற்பட்டசி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.
புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து இலவச பஸ்களை அரசு இயக்க உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத வகையில் ட்ரோன் காமிராக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.சனிப்பெயர்ச்சியை முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பல்வேறு வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் காலி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மேலும், கல்வித்துறையில் தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வது தற்காலிக நடவடிக்கைதான். புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசாணை வெளிவந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைய கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். இந்த 3 மாதங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல், வலுப்பெறுவதற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. மிக விரைவில் கல்வித்துறையில் அத்தனை காலியிடங்களை நிறைவாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.