அடிப்படை வசதிக்கோரி கறம்பக்குடி பொதுமக்கள் சாலை மறியல்
- அடிப்படை வசதிக்கோரி கறம்பக்குடி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்
- இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தை சேர்ந்த கரு கீழத்தெரு ஊராட்சியில் குரும்பி வயல், கருக்காக்குறிச்சி ஆதி திராவிடர் காலனி, மஞ்சு காடு, அருங்குளம் மஞ்சள் வயல், திருமுருகப்பட்டினம், நல்லாண்டார் கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் பழுதான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் கட்டாமல் வேறொரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனுமதி வழங்கியதை கண்டித்தும், கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, ஆணையர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.