9 ஊராட்சி மன்ற தலைவர்கள் மின்வாரியத்தில் மனு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூழிபிறை டிரஸ்ட் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் குழிபிறை மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, ஆத்தூர், செவலூர், கொவனூர், வீரனாம்பட்டி, வாழைகுறிச்சி, ராங்கியம், மேலப்பனையூர் மற்றும் பனையப்பட்டி ஊர்களில் 30 வருடங்களாக தினந்தோறும் அதிகப்படியான மின்வெட்டு, அதிகமான மின்அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. போதிய அளவில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 15 லிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்கு துணை மின் நிலையம் இல்லை.
சமீபத்தில் 12 முறைக்கு மேல் தினந்தோறும் எங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. லோ வோல்எடேஜ் காரணமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் மோட்டார்கள், பம்புகள், வீட்டு உபகரணங்கள் எல்லாம் அடிக்கடி பழுதடைக்கின்றன.
துணைமின் நிலையத்திற்கான மனுவை ஏப்ரல் 2022ல் கொடுத்து, அதற்கான 2 ஏக்கர் நிலத்தையும் குழிபிறை ஊராட்சி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதுவரை ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்பட வில்லை. புதிய மின்மாற்றிகளை அமைக்க 16.2.2022 ல் கொடுத்த மனுவிற்கு இன்று வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் துணைமின் நிலையம் அமைப்பதோடு, அப்பகுதியில் 6 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.