ரூ.3 கோடி செலவிலான புதிய மினி ஸ்டேடியம்சிறந்த பசுமை மைதானமாக அமைக்கப்படும்
- திருவரங்குளம் ஊராட்சியில் ரூ.3 கோடி செலவிலான புதிய மினி ஸ்டேடியம் சிறந்த பசுமை மைதானமாக அமைக்கப்படும்
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சியில் புதிய மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய மினிஸ்டேடியம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-
200 மீட்டர் 400 மீட்டர் ஓட்டம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம் 6 ஏக்கர் பரப்பளவில் இங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.3கோடி நிதி ஒதுக்கி உள்ளார். விரைவில் மினி ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.
எதிர்பார்த்ததை விட சிறப்பாக பசுமை மைதானமாக இந்த மைதானம் அமைக்கப்படும். மிகப்பெரிய வெற்றிகளையும் பதக்கங்களையும் பெற்று இந்த மண்ணிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வீரர் வீராங்கனைகளை இந்த மைதானத்தில் இருந்து அனுப்புவோம்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா, திருவரங்குளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அருண்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.