நெல்லை கனிம வளத்துறை அலுவலகம் முன்பு குவாரி உரிமையாளர்கள் தர்ணா
- நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை தற்காலிகமாக மூடி, ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
- மீண்டும் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை தற்காலிகமாக மூடி, ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனால் குவாரிகளில் எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் எடுக்க முடியாமல் லட்சகணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் எனவே மீண்டும் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
மேலும், குவாரிகளில் ஏற்கனவே தயாராக உள்ள எம்.சாண்ட் மற்றும் குண்டு கற்களை விற்பனைக்கு எடுத்து செல்ல அனுமதி வழங்க கோரி நெல்லை, தென்காசி மாவட்ட கல்குவாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தயாராக உள்ள எம்.சண்ட் குண்டு கற்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஆணைகளை கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி உள்ளதாகவும், ஆனால் 10 நாட்களாகியும் அனுமதி வழங்கவில்லை எனவும் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்ட சீட்டு அடிப்போர் சங்கம் சார்பில் நிர்வாகி ரிச்சர்ட் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 48 குவாரிகளும், தென்காசி மாவட்டத்தில் 47 குவாரிகளும் உள்ளது.
குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட எம்.சாண்ட் குண்டு கற்களை கொண்டு செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அதனை நாங்கள் கொடுத்த பின்பும் அனுமதி வழங்காமல் உள்ளனர்.
எனவே அதற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.