மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி எம்.பி. பேச்சு
- வருவாய்துறை மூலம் 23 பேருக்கு ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
- மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியத்தில் புத்தன்தருவை, அரசூர், தாமரைமொழி, நடுவக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மக்களிடம் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் கனிமொழி எம்.பி. மனுக்கள் வாங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
புத்தன்தருவை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன் வரவேற்றார்.
இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய்துறை மூலம் 23 ேபருக்கு ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா, ஆதரவற்ற விதவைகள், ஒய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒய்வூதியம். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இறப்பு நிவாரண தொகை, வேளாண்மை துறை மூலம் 2 பேருக்கு விவசாய இடுபொருள்கள், மகளிர் திட்டம் மூலம் 2 பேருக்கு குழுகடன், தோட்டக்கலை மூலம் 2 பேருக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் என மொத்தம் 118 பேருக்கு ரூ. 10 லட்சத்து 97 ஆயிரத்து 303 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
விரைவில் நடவடிக்கை
மக்கள் களம் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏராளமான பெண்கள் மனு அளித்துள்ளனர். அது மகளிர் உரிமைத்தொகைக்கான மனுவாக இருக்கும் என நினைக்கிறேன். மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இது 73 ஊராட்சியில் நடக்கும் மக்கள் களம் நிகழ்ச்சி. முதல்-அமைச்சர், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியாக உள்ளார். இந்த பகுதியில் உள்ள மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல திட்டப்பணிகள் செய்து முடிவடைந்துள்ளன. பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து வழங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள் வாழ்வு உயர பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தந்துள்ளார். கனிமொழி எம்.பி., சாதி, மதங்களை கடந்து அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர். எந்த இடத்துக்கு எது தேவையோ? அதனை அறிந்து நிதிகளை வழங்கி வருகிறார். மக்களுக்காகவே பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், மக்கள் களம் என்பது அருமையான நிகழ்ச்சி. எந்த எம்.பி.யும் இதைபோல் செய்து விட முடியாது. இப்பகுதி விவசாயிகளோடு இணைந்து பல முயற்சிகள் எடுத்து இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுககப்பட்டது. அதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது. அரசு, விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்து வருகிறது என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், மாநில வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஊராட்சித் தலைவர்கள் சுலைகாபீவி, தினேஷ்ராஜாசிங், சாந்தா, சபிதா, திருக்கல்யாணி, யூனியன் சேர்மன் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லதா, பிச்சிவிளை சுதாகர், ஒன்றிய பொருளாளர் ஆனந்த், நடுவக்குறிச்சி துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ரதிகலா நன்றி கூறினார்.