உள்ளூர் செய்திகள்

அணைப்பகுதிகளில் மழை நீடிக்கிறது: நெல்லை மாநகர் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்

Published On 2024-07-28 05:41 GMT   |   Update On 2024-07-28 05:41 GMT
  • மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
  • மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

நெல்லை:

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அண்டை பகுதியான தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக மிக குறைவாகவே பெய்திருந்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கார் பருவ சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது.

அணைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால் பாசனத்திற்காக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பாபநாசத்தை ஒட்டி தாமிரபரணி ஆறு தொடங்கும் இடங்களில் நெல் நடவு பணிகள் முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச் செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணி முடிந்துவிட்டது.

தற்போது நெல்லை கால்வாய் மூலமாக பயன் பெறும் கண்டியப்பேரி உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் மாநகரை கடந்து பாளையங்கால்வாய் மூலமாக பாசனம் பெறும் இடங்களில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று சேர்வலாறு அணை பகுதியில் அதிக பட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணையின் நீர்மட்டம் 115.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம்120.77 அடியாகவும் இருக்கிறது.

அணைகளுக்கு வினாடிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1,104 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

இதனிடையே விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று ராமநதி அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், விடுமுறையையொட்டி அங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த அருவிகளில் இருந்து வரும் நீரின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மானூர் பெரிய குளத்திற்கும் குற்றாலம் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News