- ராமநாதபுரத்தில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானார்கள்.
- ராமநாதபுரம் பஜார், மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தவமணியின் கணவர் இறந்து சுமார் 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் ஜான்சிராணி(வயது20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவர் வெளியில் செல்லாமல் வீட்டிலே தாயாருடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தவமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது மகள் ஜான்சி ராணி மாயமாகி இருந்தார்.
பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவமணி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் பஹ்ருதீன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் இர்பானா (வயது20). சம்பவத்தன்று பஹ்ருதீன் மற்றும் அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்கு திருச்சி சென்றனர். அப்போது இர்பானா மளிகை கடையை திறக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கடையை திறக்காமல் மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பஹ்ருதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர் மக்மூது. இவரது மகள் ஆயிஷத்துத்துல்பியா (வயது 20). இவர் நேற்று காலை திடீரென மாய மானார். மக்மூது அளித்த புகாரின் படி மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.