கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா?
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
- அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர், புல்லமடை, எருமைப்பட்டி ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா? என்று கேட்டறிந்ததுடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனா ளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கலெக்டர் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? என்றும், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தங்களுக்கு தேவையான கோரிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டால் இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், புல்லமடை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் பொது மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பயன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் தங்களின் அத்தியாசிய கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.
அதேபோல் தகுதியுடைய நபர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.