அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும்
- அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும்
- 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடலாடி மற்றும் முது குளத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறை வேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்க இயலாத நிலை உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதி களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோ சித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்க தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்குண்டான பதில்களை பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும்.
குறிப்பாக பொது மக்களோடு ஆலோசித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார மையத்திற்கு சென்று அங்கிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்.முத்து லட்சுமி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகபிரியா, சென்னை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, ஆனந்த், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.