ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. ராமேசுவரத்தில் 75.20 மி.மீ. கொட்டியது.
- தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ராமநாதபுரம்
தென் கடலோர பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கன மழையால் குளுமையான சூழல் காணப்பட்டது.
மழை காரணமாக தாழ்வான பகுதியில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8மணி வரை அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 75.20 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக கமுதியில் 7.60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகள், தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ராமநாதபுரம்-8, மண்டபம்-23.60, ராமேசுவரம்-75.20, பாம்பன்-37.30, தங்கச்சிமடம்-40.20, பள்ளமோர்குளம்-20, திருவாடானை-24.80, தீர்த்தாண்டதானம்- 40.20, தொண்டி-19.70, வட்டாணம்-23.50, ஆர்.எஸ்.மங்கலம்-67.20, பரமக்குடி-58.80, முதுகுளத்தூர்-28, கமுதி-7.60, கடலாடி-35.20, வாலிநோக்கம்-21.60.