டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்-ராமநாதபுரம் கலெக்டர்
- டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறி உள்ளார்.
- வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.
உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொது மக்களின் சேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை வழங்க டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் பாம்பு கடி மற்றும் அவசர கால சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு குறித்தும், விபத்து மற்றும் அவசர கால பிரிவையும் பார்வையிட்டார். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.