மழை பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் பாதிப்பு
- மழை பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
- ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன.
இங்குள்ள தென்னந் தோப்புகள் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் பனங்கொட்டைகளை நடவு செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மழை இல்லாததால் பனங்கிழங்கு முழுமையான வளர்ச்சி பெறவில்லை.
இதனால் கிழங்கு பருமன் குறைந்து விளைச்சல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம், அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை பெண்கள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பனங்கிழங்கு விற்பனை செய்யும் பெண் கூறுகையில், இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தாமதமாக விற்பனைக்கு வந்துள்ளது.
விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகி விட்டது. பொங்கல் பண்டிகை என்பதாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்பதாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கி விட்டதால் கிழங்கின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றார்.