- தொழிலாளர் தின கிராமசபை கூட்டங்கள் நடக்கிறது.
- கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரியிருப்ப தாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.