உள்ளூர் செய்திகள்

மாணவிகளிடம் ஆபாச பேச்சு: கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைப்பு

Published On 2023-02-15 08:17 GMT   |   Update On 2023-02-15 08:17 GMT
  • மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.

மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News