தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
- பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பொருளா தார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் புல்லியன் பின் டெக் நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கற்பகவல்லி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் ஆனந்தன், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதே போல் ராமநாதபுரம் மாவட்டம், முத்துபுரம், அக்ரஹாரம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த வி.கே.எல்.டயரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வாசுகிநாதன், கார்த்திக் கணேஷ், காஜா முகைதீன் ஆகிய நபர்கள் சேர்ந்து பரமக்குடி மற்றும் அந்தப்பகுதியைச் சுற்றி பொதுமக்களை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் அதற்கான முதிர்வுத்தொகையை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சண்முகசுந்தரம், என்பவர் புகார் செய்துள்ளார்.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.