உள்ளூர் செய்திகள்

1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி

Published On 2023-03-25 07:52 GMT   |   Update On 2023-03-25 07:52 GMT
  • 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
  • “பசுமை ராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அவர் நாற்றங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு பேசியதாவது:-

வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தேவையான தென்னங்கன்று களை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து "பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25லட்சம் கன்றுகளும், பள்ளி கல்வித்துறையின் மூலம் 10லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப் பாண்டில் 1 கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு "பசுமை ராமநாதபுரம்" உருவாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News