உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பழமையான தமிழ் கல்வெட்டு படிக்க சிறப்பு பயிற்சி

Published On 2022-09-22 06:24 GMT   |   Update On 2022-09-22 06:24 GMT
  • திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பழமையான தமிழ் கல்வெட்டு படிக்க சிறப்பு பயிற்சி நடந்தது.
  • இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான கல்வெட்டு களை படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் படிக்க பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் 23 பேருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கல்வெட்டுகள் காணப்படும் கோவிலான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை நேரில் படித்து அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கோவிலில் மாறவர்மன் சுந்த ரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் உள்ளிட்ட பிற்கால பாண்டியர்கள், விஜய நகர மன்னர் வீரகம்பண உடையார், நாயக்கர், மாவலி வாணாதிராயர், சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளை மாணவர்கள் படித்து எழுதிப் பார்த்தனர். இங்குள்ள ஒரு பாண்டியர் கல்வெட்டில் இப்பகுதியில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் காணப்படுவது மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பயிற்சியை மன்றச் செயலர் ராஜகுரு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

Tags:    

Similar News