இமானுவேல்சேகரன் சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்றவர் கைது
- தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.